Tuesday 25 November 2014

எடுத்தது எங்கே 1



படிப்பாளி ஆகாத எவர் ஒருவரும் படைப்பாளி ஆக முடியாது. அந்த வகையில் படைப்பாளிகள் படித்தவை பலவும் அவர்களின் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்தும் படிந்தும் கிடக்கின்றன. படைக்கின்றபோது அவை, சில நேரங்களில் அவனை அறிந்தும் பல நேரங்களில் அவனை அறியாமலும் அவனது படைப்புகளில் தலை காட்டும். பல இடங்களில் உருமாறியும் சில இடங்களில் உள்ளபடியும் இடம் பெறுவதைக் காணமுடியும்.

கருத்து ஒன்றானாலும் கவிஞன் தன்

கவித்துவத்தை அதில் காட்டியிருப்பான். சொல்வது அவன் ரசித்ததன் எச்சம் எனினும் அதில் அவனது கற்பனையின் உச்சம் இருக்கும். இலக்கியத்தை எளிமைப்படுத்தி, பாமரனுக்குப் புரியவைப்பதாகவும் இருக்கும். அந்த வகையில், கண்ணதாசனின் பல பாடல்களைக் கூறலாம். ஆனால், அந்தக் கருத்துக்கு அவர் என்றுமே உரிமை கொண்டாடியதில்லை. அடுத்தவன் பெற்ற பிள்ளையை தன் பிள்ளை என்று அவர் சொல்லிக்கொண்டதில்லை.

வியட்நாம் வீடு படத்தில் வரும் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்ற பாடலில் வரும் இந்த முதலடி,பாரதியார் பாடலில் இருந்து எடுத்தது. அடுத்து வரும் அற்புத வரிகள் அனைத்தும் கண்ணதாசன் எழுதியவை. பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், படத்தின் டைட்டிலில் பாடல் பாரதியார் என்று போடுங்கள் எனச் சொன்னாராம்.முதல் வரிதான் பாரதியார் எழுதியது என்றாலும், அடுத்து வந்த வைர வரிகளுக்கு வழி ஏற்படுத்தியது பாரதியாரின் வரிகள்தான். அந்த நன்றியை வெளிப்படுத்தத்தான், ‘பாடல் பாரதியார்’ என்று போடச் சொன்னார் கண்ணதாசன். இன்று எத்தனை பேருக்கு இந்த மனம் இருக்கிறது?

திரையுலகில் கண்ணதாசன் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், திரைப்பாடல் எழுதத் தொடங்கியவர் வைரமுத்து, கண்ணதாசன் மறைவு, வைரமுத்துவுக்கு வசதியான பாதையை போட்டுக்கொடுத்தது. பாரதிராஜாவும் இளையராஜாவும் பக்கத்துணையாக இருந்ததால், அவருக்கு வானமும் வசப்பட்டது.

பல ஆயிரம் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்துவின் பாடல்களிலும் அவர் ரசித்த, புசித்த பல வரிகள் வந்து தலை காட்டுவதைக் காணமுடியும்.

உருமாற்றம் என்பது தடுமாற்றம் அல்ல. உள்ளதை ஒப்புக்கொண்டுவிட்டால். ஒப்புக்கொள்ளாதபோதுதான், உருவல் என்று விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் வைரமுத்து ரசித்த பலவற்றை திரையுலகு புசிக்கக் கொடுத்தது பற்றி அலசுவதுதான் இந்த தொடர். ஒப்புநோக்கி ரசிப்பதுதான் இந்த தொடரின் நோக்கம். சொல்வதல்ல. தொடர்ந்து வரும் கருத்துகளை வாசியுங்கள். எழுத்தை நேசியுங்கள்.

எடுத்தது வரும்...

No comments:

Post a Comment

தமிழ்த் தேன் சுவைத்தமைக்கு நன்றி..._/\_